தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து, தோழமைக் கட்சிகளுடன் நாளை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

சென்னை : மே-24

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், இதுவரை 13 பேர்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, நாளை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக திமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  துப்பாக்கிச்சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்றும் இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை, முதலமைச்சரோ, அமைச்சர்களோ இதுவரை சந்தித்து ஆறுதல் கூறாததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அமைதியான முறையில் தீர்வு காண முயற்சிக்காததை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், திமுக, மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts