தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு

தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்கு மூன்றாவது நாளாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி : மே-24

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்தனர்.  மேலும் நேற்று நடந்த சம்பவத்தில் காவல்துறை மீண்டும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் என்பவர் கொல்லப்பட்டதையடுத்து பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தவரில் செல்வசேகர் என்பவர் இன்று உயிரிழந்தார்.  இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.

தூத்துக்குடியில் கலவரம் பரவிடாமல் தடுப்பதற்காக 5 நாட்களுக்கு இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவமனை வளாகம் அருகே சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிபவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடியில் 3வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டதால் பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். மூன்றாவது நாளாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts