தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இன்று திமுக, தோழமைக்கட்சிகள் சார்பில், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை: மே-25

தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், திமுக தோழமை கட்சிகள் சார்பில் இன்று மாநில முழுவதும் முழு அடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை எழும்பூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

சென்னை சைதாப்பேட்டையில், திமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ம. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Related Posts