தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, அப்பகுதி மக்கள், மாணவர்கள் தொடர்ந்து இன்று 50-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி :ஏப்ரல்-02

தூத்துக்குடியில் மக்களின் உயிருக்கு உலை வைக்கும் நாசகார ஸ்டெர்லைட் ஆலை, தற்போது விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசின் துணையுடன் நடைபெறும் இந்த விரிவாக்கத்துக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 50-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையில் வெளியேறும் நச்சுப் புகையால் காற்று மாசுபடுவதுடன் பல்வேறு கொடிய நோய்களுக்கும் ஆளாவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிலத்தடி நீரில் நஞ்சு கலந்து உயிருக்கு உலை வைக்கும் அளவு பாதிப்பு ஏற்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து, ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெறும் தன்னெழுச்சி போராட்டத்தில் கல்லூரி மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். வ.உ.சி. கல்லூரி முன்பு, 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்படும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.       

இதேபோல், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

Related Posts