தூய்மை பணியின் போது கழிவு நீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்த முதலமைச்சர்

புதுச்சேரியில் தூய்மை பணியின் போது, கழிவு நீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்த முதலமைச்சர் நாராயணசாமியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

          மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டம் புதுச்சேரி மாநிலத்தின் அனைத்து பகுதகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட சாரம் மார்க்கெட் பகுதியில் புதுச்சேரி நகராட்சி சார்பில் சிறப்பு துப்புரவு பணி நடைபெற்றது. இப்பணிகளை தொடக்கி வைத்த முதலமைச்சர் நாராயணசாமி, அங்கிருந்த கால்வாயில் அடைப்பு இருந்ததை பார்த்ததும் சற்றும் தாமதிக்காமல் அருகில் இருந்த ஊழியரிடம் மண்வெட்டியை வாங்கி கால்வாயில் இறங்கி அடைப்பை சரிசெய்தார். இதனை கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்துடன், கைத்தட்டி உற்சாகப்படுத்தி முதலமைச்சரை பாராட்டினர்.

          முன்னதாக, புதுச்சேரி காவல்துறையின் 55வது உதயதின நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் நாரயணசாமி, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.  பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், புதுச்சேரியில் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலை உள்ளதாகவும், பெண்கள் பாதுகாப்பில் புதுச்சேரி காவல்துறை அதிக முக்கியத்தும் அளித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் புதுச்சேரி காவலர்கள் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் அளவிற்கு திறமை மிக்கவர்கள் என அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Related Posts