தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு தமிழகம்-ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகம்-ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கிய பின்பு அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது. கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், .அதன்பிறகு இது தீவிரம் அடைந்து காற்றழுத்தமாகி, புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வரும் 10-ந் தேதி முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறி தமிழகம்-ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும்பட்சத்தில் அதற்கு நாடுகள் வரிசைப்படி தாய்லாந்து ‘பேய்ட்டி’ என பெயர் சூட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts