தென்பெண்ணை ஆற்றின் மீது கர்நாடகாவால் முழு உரிமை கோர முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்   

தென்பெண்ணை ஆறு கர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலையில் உற்பத்தியாகி ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வழியாக 432 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் வரும் பகுதியில் போர்வெல் அமைத்து கர்நாடக விவசாயிகள் நீர் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இரு மாநில எல்லையை ஒட்டி கர்நாடக அரசு புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கான ஆய்வு பணிகளையும் கர்நாடக அரசு தொடங்கியது.  மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012, 2013ம் ஆண்டுகளில் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ளது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார். மேலும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து இரண்டு மாநிலங்களும் பதிலளிக்குமாறு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர். இதன்படி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், தென்பெண்ணை ஆற்றில் தங்களின் ஒப்புதல் இல்லாமல் கட்டுமானப் பணிகள், ஆய்வுகள் உள்ளிட்ட எவ்வித பணிகளும் மேற்கொள்ளக் கூடாது எனவும், தமிழகத்திலும் தென்பெண்ணையாறு ஓடுவதால் கர்நாடக அரசு முழு உரிமை கோர முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Related Posts