தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

கத்தரி வெயில் தொடங்கிய நாள் முதலே, வட மாவட்டங்கள் உட்பட, தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், வெப்பத்தின் தாக்கம் உச்சத்தை எட்டியது. இதனிடையே, வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே , மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின், உள் மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களில், பலத்த காற்றுடன், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி,கோயம்புத்தூர், நாமக்கல், கரூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும். மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மழை பெய்யாத இடங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், குறிப்பாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும்  அதில் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், 7 சென்ட்டி மீட்டரும், தேனி மாவட்டம் கூடலூரில் 4 சென்டிமீட்டரும், கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில், 3 சென்டிமீட்டரும் மழை பதிவாகியிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Related Posts