தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட வேல்முருகன் புழல் சிறையில் அடைப்பு

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை : மே-31

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த மாதம்        1-ந்தேதி உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடி தாக்கப்பட்டது. இந்த வழக்கில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு நாட்கள் சிறையில் வேல்முருகன் உண்ணாவிரதம் இருந்ததால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக, நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதைத்தொடர்ந்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த வேல்முருகன்,     ஐசியு-வில் இருந்த தன்னை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், தன்னுடைய திரைப்படம் ஓடுவதற்காக இளைஞர்களை புகை மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாக்கிய நடிகர் ரஜினிகாந்த்-தான் தமிழகத்தின் சமூக விரோதி எனவும் வேல்முருகன் புகார் கூறினார்.

Related Posts