தேசத் துரோக சட்டத்தை பயன்படுத்தப்படுவது அதிகரிப்பு : நீதிபதி தீபக் குப்தா அதிருப்தி

நாட்டில் பேச்சுரிமையை பறிப்பதற்கு தேசத் துரோக சட்டத்தை பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தேசத்துரோக சட்டம் மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து அவர் உரையாற்றினார். அப்போது, பெரும்பான்மையின் கருத்தை எப்போதும் சட்டமாக்கிவிட முடியாது என்றார். சிறுபான்மை மக்களுக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ளது என்று குறிப்பிட்ட அவர், தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் அரசு, அனைத்து மக்களின் கருத்தை பெற்றது என கூற முடியாது என்றார். மாற்று கருத்து தெரிவிப்பவர்களை தேசவிரோதிகள் என குறிப்பிடும் போக்கு அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த அவர், சமூக வலைதளங்களில் மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களை கேலி செய்யும் போக்கு அதிகரித்து வருவதால், மக்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்க அச்சப்படுவதாக நீதிபதி தீபக் குப்தா தெரிவித்தார். மாற்று கருத்து தெரிவிக்கும் உரிமை, அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள மிக முக்கிய உரிமை என்று தெரிவித்த அவர், ஒரு நபர் சட்டத்தை மீறாமல், வன்முறையை தூண்டாமல் மாற்று கருத்தை தெரிவிக்கவும், அதை பரப்பவும் அனைத்து உரிமையும் உள்ளது என்று கூறினார்.  தேச துரோக சட்டங்கள், வெளிநாட்டினர் ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதி குப்தா, அந்த ஆட்சியாளர்கள் கருத்து சுதந்திரத்தை பறிப்பதற்காகவே இந்த சட்டங்களை கொண்டுவந்தனர் என்றார். அரசியல் தலைவர்களை விமர்சிப்பது அவதூறு ஆகுமே தவிர தேசதுரோகம் ஆகாது எனவும் குப்தா தெளிவாக விளக்கினார்.

Related Posts