தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி  தொடங்கி வைத்தார்

நாடு முழுவதும் 10 கோடி மக்கள் பயன்பெறும் தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி  தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவை உள்ளடக்கிய புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கைதாக்கலின் போது அறிவிக்கப்பட்டது. பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் எனும் ஆயுஷ்மான் பாரத்’’ திட்டம் உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக பொருளாதாரம் மற்றும் சாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த மருத்துவக் காப்பீட்டுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு  ஆயிரம் முதல் ஆயிரத்து 200  வரை காப்பீட்டுத் தொகை செலுத்தி, ஒரு குடும்பத்துக்கு 5 லட்சம்  ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு தேவையான நிதியில் 60 சதவீதம் மத்திய அரசும்,  மீதித் தொகையை மாநில அரசுகளும் ஏற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts