தேஜஸ் போர் விமானம் இந்திய விமானப் படையின் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர இறுதி ஒப்புதல்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜஸ் போர் விமானம் இந்திய விமானப் படையின் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படைக்காக அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இலகு ரக தேஜஸ் போர் விமானம்பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த விமானம், போர் விமானங்களிலேயே  குறைவான எடை கொண்டது. கடந்த 2013ல் முதற்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் தேஜஸ் விமானம் கடந்த 2016ல் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து, 2 ஆண்டுகள் சோதனை செய்யப்பட்டு, விமானப்படையின் கோரிக்கைப்படி பல்வேறு  கட்டமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற ‘ஏரோ இந்தியா’ போர் விமானங்கள் கண்காட்சியில் தேஜஸ் விமானத்திற்கு இறுதிகட்ட ஒப்புதல் சான்றிதழ் முறைப்படி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த விமானம் விமானப்படையின் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்நிலையில், ஏரோ கண்காட்சியில் நேற்று பங்கேற்ற ராணுவ தளபதி பிபின் ராவத், முதல் முறையாக தேஜஸ் விமானத்தில் ஏறி பயணம் மேற்கொண்டார். இதற்கிடையே, இந்திய ராணுவம், 70 மில்லிமீட்டர் நீளமுள்ள 135 ராக்கெட் லாஞ்சர்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பிரான்சின் தலெஸ் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது. இந்த ராக்கெட் லாஞ்சர்களை இலகுரக மற்றும் போர் ஹெலிகாப்டர்களில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts