தேனி மாவட்டத்தில் உள்ள சண்முகா நதியில் இருந்து நாளை மறுநாள் முதல் 50 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார்: முதலமைச்சர்

தேனி மாவட்டத்தில் உள்ள சண்முகா நதியில் இருந்து நாளை மறுநாள் முதல் 50 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம், சண்முகாநதி நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள உத்தமபாளையம் வட்டத்தை சார்ந்த புன்செய் நிலங்கள் பயன்பெறும் வகையில் சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக  கூறியுள்ளார். இதனை  ஏற்று, தேனி மாவட்டம், சண்முகாநதி நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ் உத்தமபாளையம் வட்டத்தை சார்ந்த ஆயிரத்து 640 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயன்பெறும் வகையில் மொத்தம் 62புள்ளி 69 மில்லியன் கன அடி தண்ணீரை சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 14 முதல் 50 நாட்களுக்கு திறந்துவிட ஆணையிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தைச் சார்ந்த ராயப்பன் பட்டி,மல்லிங்காபுரம், சின்ன ஓவுலாவுரம், எரசக்க நாயக்கனூர், கன்னிசேர்வை பட்டி, அழகாபுரி, ஓடைப்பட்டி மற்றும் சீப்பாலக் கோட்டை ஆகிய 8 வருவாய் கிராமங்கள் பாசன வசதிபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts