தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு

தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவரும், நிரந்தரப் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேமுதிகவின் பொருளாளராக பிரேமலதா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேமுதிக மகளிரணித் தலைவியாக உள்ள பிரேமலதாவுக்கு கட்சியில் வேறு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாத நிலையில், தற்போது பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவைத் தலைவராக இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளராக அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தன்னைப் பொருளாளாராகத் தேர்ந்தெடுத்த  தேமுதிக தொண்டர்களுக்கு நன்றி  தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொருளாளர் பதவி என்பது கட்சியின் நிதி நிலையை மட்டுமல்ல, தமிழக மக்களின் பொருளாதார நிதி நிலைமையையும் உயர்த்துவதுதான் என்று அவர் தெரிவித்தார்.தமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்னவும், அப்போது தேமுதிக ஒரு பொற்கால ஆட்சியைத் தரும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts