தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கோவையிலிருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தேனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்றிரவு சரக்கு வாகனத்தில் புதிதாக  50  வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு  வரப்பட்டன.  இதுகுறித்து தகவல் அறிந்த திமுக,காங்கிரஸ், மதிமுக,விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும்  அமமுவினர்  ஒட்டுமொத்தமாக  திரண்டு வந்து அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்க்க வேண்டும் என்று கூறினர். அவர்களுக்கு அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் காட்டப்பட்டன. மேலும், அது குறித்து விளக்கம் அளித்த அதிகாரிகள் தொகுதியில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் ஏதாவது நடத்தப்பட வாய்ப்பு  இருக்கலாம்  என்று கருதி வாக்குப்பதிவு இயந்திரங்களை  தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள்  தொகுதியில் எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்காத நிலையில் தேர்தல் ஆணையம் அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தற்போது புதிதாக வந்துள்ள வாக்குப்பதிவு பெட்டிகள் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினர்.  ஏற்கனவே வாக்குப் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளதால் புதிதாக வந்த பெட்டிகளை உடனடியாக வேறு இடத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் தேனி மாவட்டத்தில் வைக்கக்கூடாது என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டன. சம்பவ இடத்திற்கு வந்த  மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அளித்த விளக்கத்தையும் எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.   இந்த இடத்தை விட்டு வாக்குப்பதிவு இந்திரங்களை அப்புறப் படுத்தாவிட்டால்  மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு,  தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படியே, கோவையிலிருந்து தேனிக்கு 50வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளது எனவும்,   இது வழக்கமான நடவடிக்கையே என்றும தெரிவித்தார். மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டால், பயன்படுத்துவதற்காக இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், . மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Related Posts