தேர்தல் பணிகளுக்காக துணை ராணுவத்தினர் இன்று தமிழகம் வருகை:சத்யபிரதா சாகு

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தமிழகத்தில் மக்களவை, 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளதாகவும், இந்தத் தேர்தலை பாதுகாப்பான, சுதந்திரமான முறையில் நடத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த முன்னேற்பாடுகள் குறித்து இன்று மாலை 6 மணியளவில் அனைத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.  இந்த ஆலோசனையில் தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பாக எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஏற்கெனவே பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், 150 கம்பெனி துணை ராணுவப் படையினர் இன்று முதல் தமிழகம் வரவுள்ளதாகவும் வரும் 15-ஆம் தேதிக்குள்ளாக அனைத்து துணை ராணுவப் படையினரும் வந்து சேருவர் என அவர் தெரிவித்தார்.

Related Posts