தேர்தல் பணியின் போது ஊழியர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது: சத்யபிரதா சாகு 

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம்  பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு,, கரூர் வாக்கு எண்ணும் மையத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார் கூறியிருந்த நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அளித்துள்ளதாகவும், அதன்பேரில் ஆய்வு செய்ய கூடுதல் தமிழக தேர்தல் அதிகாரி ராஜாராம்  செல்வதாகவும்  தெரிவித்தார்.

மதுரையில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், அவர் குறிப்பிட்டார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரம் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டு, வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சிவகார்த்திகேயனின் பெயர் விடுபட்டது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும், ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் நிலை ஏற்பட்டால் சிவகார்த்திகேயன் வாக்கை என்ன செய்வது என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் அவர்  கூறினார்.நடிகர் ஸ்ரீகாந்த், தான் வாக்களித்ததாக தொலைக்காட்சிகளில் பேட்டியளித்த நிலையில் அவர் வாக்களிக்கவில்லை என தொடர்புடைய தேர்தல் அதிகாரி கூறுவதாகவும், அது குறித்தும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

தேர்தல் பணியின் போது ஊழியர்கள் உயிரிழந்தால் நிதியுதவி 10 லட்சம் ரூபாயில் இருந்து 15லட்சம் ரூபாயாகவும், தீவிரவாதத் தாக்குதல் உள்ளிட்டவற்றால் உயிரிழக்க நேர்ந்தால் நிதியுதவி 20லட்சம் ரூபாயில் இருந்து 30 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு கூறினார். இதனை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா ஆகியோர் இன்று மாலை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர்.

Related Posts