தொழிலாளர் வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை காக்க மே நாளில் சூளுரை ஏற்போம்: வைகோ

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உழைக்கும் வர்க்கத்தின் உரிமைத் திருநாளாம் மே முதல் நாளில் தொழிலாளர்களுக்கு  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.  18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தொழிற்புரட்சி உருவான காலகட்டத்தில், தொழிலாளர்கள் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரையில் பணி செய்யும்படிக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும்,  லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டு இருந்த முதலாளித்துவம், தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறை இன்றிச் சுரண்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறைந்த வேலை நேரத்திற்காகத் தொழிலாளர்கள் வெகுண்டு எழுந்து போர்க்குரல் எழுப்பியபோது, இங்கிலாந்தில் சாசன இயக்கம் தோன்றி, 10 மணி நேர வேலை எனும் கோரிக்கையை முன்வைத்துப் போராடியது எனவும் இதனைத் தொடர்ந்து பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் போராட்டம், ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், ரஷ்யாவில் எட்டு மணி நேர வேலைக்காக எழுச்சி மிக்க போராட்டம் என உலகம் முழுவதும் தொழிலாளர்கள் வீறுகொண்டு எழுந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் அனைத்துத் தொழிலாளர்களின் கூட்டமைப்பு 1886, மே 1 ஆம் நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது எனவும், 1886 ஆம் ஆண்டு மே 4 இல் அமெரிக்காவின் சிகாகோ நகரில், வைக்கோல் சந்தையில் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்ட தொழிலாளர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   புரட்சிக்கு வித்திட்ட தொழிலாளர் தலைவர்களான ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்சன்ஸ், அடலா~ப் பிஷர், ஜார்ஜ் ஏங்கல் ஆகிய நான்கு பேரும், 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11- ந் தேதி  தூக்கில் இடப்பட்டதை அவர் குறிப்பிட்டுள்ளார். 4 பேரின்  இறுதி ஊர்வலத்தில் வரலாறு கண்டிராத வகையில்5 இலட்சம் தொழிலாளர்கள் திரண்டனர் எனவும், அந்த நாள்  உலக வரலாற்றில் கறுப்பு நாளாக இடம்பெற்று விட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.அதன் பிறகே  மே முதல் நாள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது எனவும்,  1889 ?ம் ஆண்டு  பிரான்சு தலைநகர் பாரிசில்  நடைபெற்றபன்னாட்டுத் தொழிலாளர் மாநாட்டில்தான் காரல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேரம் வேலை நிர்ணயப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 1890 -ம் ஆண்டு மே 1 ஆம் நாள் உலக அளவில் தொழிலாளர் இயக்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களுக்கு அறைகூவல் விடுத்தன எனவும்,  அந்த உரிமைப் போராட்டம் வெற்றி பெற்றதால் உலகம் முழுவதும் மே தினம் வரலாற்று சிறப்புக்குரிய தொழிலாளர் நாள் ஆனது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகத் தொழிலாளர்கள் இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து, போராடிப் பெற்ற உரிமைதான் எட்டு மணி நேர வேலை என அவர் கூறியுள்ளார்.  இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுக் கால பா.ஜ.க. ஆட்சியில், தொழிலாளர்கள் பல வகைகளில் நசுக்கப்பட்டு வருகின்றனர் எனவும்,  தொழிலாளர் நலனுக்காக அம்பேத்கர் முன் முயற்சியால் கொண்டுவரப்பட்ட44 தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை 4 சட்டங்களாக மாற்றி, நாடாளுமன்றத்தில் சட்ட முன்வரைவை பா.ஜ.க. அரசு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொழிலாளர் உரிமைக்குப் போராடினால் மிரட்டி ஒடுக்கும் எதேச்சதிகாரப் போக்கு தலைவிரித்து ஆடுகிறது எனவும், தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டதாகவும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ள வைகோ,  நிரந்தர தன்மை கொண்ட பணிகள் அனைத்தும் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் தொழில் பழகுநர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் கொடுமை தொடருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.  குறைந்தபட்ச ஊதியம் கூட இல்லாமல், பணிப் பாதுகாப்பு இல்லாமல் கோடிக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதாகவும், குறிப்பிட்ட கால வேலை என்று நிர்ணயித்து, நிரந்தர வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். . குறைந்தபட்ச ஊதியம், சமவேலைக்கு சம ஊதியம் போன்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளைச் செவிமடுக்க மோடி அரசு தயாராக இல்லை எனவும், தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் காலவரையின்றி பணிபுரியக் கட்டாயப்படுத்தப்பட்டு வருவது மட்டும் அன்றி, அவர்களின் பணி பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொழிலாளர் நலன் காக்கும் அரசு பொறுப்பு ஏற்றால்தான், பெற்ற உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க முடியும் எனவும் . அதற்கான சூளுரையை மே நாளில் ஏற்போம் என்று கூறி, தொழிலாளர்களுக்கு மே நாள் வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

 

 

Related Posts