தோப்பில் முகமது மீரான் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு ஏற்பட்ட பேரிழப்பு:  வைகோ இரங்கல்  

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாஞ்சில் நாடு தமிழிலக்கிய  உலகிற்கு  தந்த  கொடை  தோப்பில் முகமது மீரான் எனவும், அவரது மறைவுக் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார். 1997 -ல் வெளிவந்த அவரது சாய்வு நாற்காலி புதினம் தன்னை மிகவும்  கவர்ந்தது எனவும்  மிகச்சிறந்த இந்த நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவர் தோப்பில் முகமது மீரான் எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு,அஞ்சுவண்ணம் தெரு போன்ற புதினங்களும் பல சிறுகதைத் தொகுப்புகளும் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களும் முகமது மீரானின் படைப்புத்திறனை பறைசாற்றியவை என அவர் குறிப்பிட்டுள்ளார். தென்குமரிமுனையில் தேங்காய் பட்டினத்தில் பிறந்து, தமிழ் மலையாளம் இரு மொழிகளிலும் ஆளுமைத் திறன் உள்ளவராக விளங்கியவர் எனவும், கடலோடிகளான மீனவ சமூக மக்களின் வாழ்வியலை துல்லியமாக சித்தரிக்கும் அவருடைய நாவல்களில் எளிய மனிதர்களின் வாழ்க்கைப் பாடுகளை அவருக்கே உரிய தனித்துவமான நடையில் நாஞ்சில் நாட்டுக்கு உரிய மலையாளம் கலந்த தமிழில் எழுதியிருப்பது அவருடைய சிறப்பு எனவும் அவர் கூறியுள்ளார். மதிமுக இலக்கிய அணி சார்பில் நடத்திய விழாவில் பங்கேற்று அவர் ஆற்றிய உரை இன்னமும்தனது நெஞ்சில் நிழலாடுகிறது எனவும், தனிப்பட்ட முறையில் தன் மீது பேரன்பு காட்டியஅவருடைய உயரிய பண்பாடு என்றென்றும் நன்றிக்கு உரியதாகும் எனவும் அவர் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

. தோப்பில் முகமது மீரானின் மறைவால் துயருற்று இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழிலக்கிய அன்பர்களுக்கும்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக அந்த அறிக்கையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Related Posts