நடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ்  மாரடைப்பால் இன்று காலமானார்

நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் இன்றுகாலமானார்.

நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் இராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று உயிரிழந்தார்.

சின்னபுள்ள படத்தில் நடிகராக அறிமுகமான ரித்திஷ் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் அண்மையில் வெளியான எல்கேஜி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2009 மக்களவை தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கடந்த 2014-ல் திமுக-வில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார். இன்று இராமநாதபுரத்தில் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய ரித்திஷ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரித்திஷின் மறைவு குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய  நடிகர் சங்கத் தலைவர் நாசர்,  ரித்திஷின் மறைவு குறித்து கேள்விப்பட்டவுடன் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து தான் இன்னும் மீளவில்லை என்றார்.  ரித்திஷ் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவார். எனவும்,  தென்னிந்திய நடிகர் தேர்தலில் அவருடன் பயணித்ததாகவும்,  அரசியலில் தீவிரமாக ஈடுபாடு கொண்டவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ரித்திஷ் என்ற நல்ல தம்பியை இழந்துவிட்டதாகவும், அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் நாசர் கூறியுள்ளார்.

Related Posts