நடிகர் சங்க தேர்தலை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் மேல்நிலைப்பள்ளியில் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உறுப்பினர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் தேர்தலை நிறுத்தி சங்கங்களின் பதிவாளர் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டார். அந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கை வெள்ளியன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதபதி ஆதிகேசவலு, நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.

ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்தல் நடத்தலாம் என்றும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை முடிவுகளை வெளியிடக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தேர்தலை எங்கு நடத்தலாம் என்பதை, ஏற்கனவே வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷிடம் முறையிட்டு இறுதி செய்து கொள்ளலாம் என்று நீதிபதி ஆதிகேசவலு அறிவுறுத்தி இருந்தார்.

இதையடுத்து தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி ஏற்கனவே விஷால் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஆனந்த் வெங்கடேசிடம் முறையீடு செய்யப்பட்டது. அதனை ஏற்று சென்னை பெசன்ட்நகரில் உள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வீட்டில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நடிகர் சங்க தேர்தலை நடத்த அனைத்து ஆயத்தப்பணிகளும் தயார் நிலையில் இருப்பதாக, விஷால் தரப்பில் வாதிடப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் தேர்தல் நடத்தலாம் என்றும் ஏற்கனவே அங்குதான் நடத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த பள்ளியில் அனைத்து வசதிகளும் இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறை உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

காவல்துறை சார்பில் அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி வாதிட்டார். ஏற்கனவே சில நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியிருப்பதால் அதிகப்படியான காவலர்களை கொண்டு பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் இருப்பதாக அவர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மயிலாப்பூர் எப்பாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடிகர் சங்க தேர்தலை இன்று நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். முடிந்தவரை காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

இதனிடையே ஐசரி கணேஷ், அனந்தராமன் ஆகிய இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, நீதிபதி தானாக முன்வந்து தொடுத்துள்ளார். நடிகர் சங்க வழக்கை விசாரணைக்கு ஏற்க வேண்டுமென தம்மை அவர்கள் இருவரும் வேறு ஒருவர் மூலம் அணுகியதாகவும், இதனால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்வதாகவும் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பாக்கியராஜ், அமைதியான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே தங்களுடைய குறிக்கோள் என்று தெரிவித்தார்.

(பைட்)

இதனிடையே, நடிகர் சங்க தேர்தலில் தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் சங்க தேர்தலில் ஓட்டு போட இயலாது என நடிகர் ரஜினிகாந்த் தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Related Posts