நடிகர் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் மரியாதை

நடிகர் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

         நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி சிவாஜி கணேசனின் 91-வது பிறந்த நாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் நிருவப்பட்டுள்ள அவரது சிலைக்கு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, மா.பா. பாண்டியராஜன், பென்ஜமின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து ராம்குமார், நடிகர்கள் பிரபு, விக்ரம்பிரபு, விஜயகுமார், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பி.சி.அன்பழகன் ஆகியோர் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

         பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து பெருமை சேர்த்தது அ.தி.மு.க. அரசுதான்  எனவும் நீதிமன்ற உத்தரவுப்படி மெரினாவில் இருந்த சிவாஜி கணேசனின் சிலை அகற்றி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மெரினாவில் சிவாஜி சிலை அகற்றப்பட்டதற்கும்,தமிழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் கூறினார். மெரினா கடற்கரையில் சிவாஜி கணேசனுக்கு வேறு சிலை வைக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்தால் அது பற்றி அரசு பரிசீலிக்கும்  என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

          நடிகர் பிரபு கூறுகையில், சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். அடையாறு மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசன் சிலையின் கீழ் கருணாநிதியின் பெயரை பதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதை பரிசீலிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

          சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நடிகர் எஸ்.வி. சேகர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி மற்றும் கள்ள உறவு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை ஆராய்ந்து பார்க்காமல் பலர் விமர்சனங்கள் செய்வதாக கூறினார். தீர்ப்புகளை விமர்சிக்கலாம் ஆனால் நீதிபதிகளை விமர்சிக்க கூடாது என்று அவர் தெரிவித்தார். தமிழிசையுடன் சண்டை போடுவதற்கு தான் பாஜகவில் இல்லை எனவும் தலைவரை நியமிக்கும் பொறுப்பு டெல்லி தலைமையிடம் இருப்பதாகவும் கூறினார்.

           சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியப்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், பொது மக்களிடமிருந்து  பணம் பெறுவதிலேயே மோடி அரசு குறியாக இருப்பதாக தெரிவித்தார். உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களின் மீது சுமையை மத்திய அரசு அதிகரிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்பது எதிர்க்கட்சிகளை விமர்சிக்கவும் தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கவும் கோடிக்கணக்கில் செலவிட்டு நடத்தப்பட்ட விழா என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

           நடிகர் சிவாஜி கணேசனின் 91 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி கிழக்கு கடறகரை சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குமுதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதேபோல் பல்வேறு அமைப்பினர் சார்பில் சிவாஜி கணேசனின் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்

Related Posts