நதிகளை இணைக்க ஒரு கோடி கொடுப்பதாக கூறிய ரஜினிகாந்த் பணத்தை கொடுத்தாரா?: அமைச்சர் ஜெயக்குமார்

 

 

நதிகளை இணைக்க ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக கூறிய நடிகர் ரஜினிகாந்த், பணத்தை கொடுத்தாரா என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், நதிகளை இணைக்க வேண்டும் என்பது அதிமுகவின் கொள்கை என்று கூறினார். நதிகளை இணைப்பதற்கு ஒருகோடி ரூபாய் கொடுப்பதாக அறிவித்த ரஜினி தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது ;-

ஆடிட்டர் குருமூர்த்தி கணக்கு வேலையை மட்டும் பார்க்காமல், அரசியல் வேலையையும் பார்ப்பவராக உள்ளார். ‘சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுப்பது’ போல் சும்மா இருக்கும் ரஜினியை குருமூர்த்தி ஊதிக் கெடுக்க வேண்டாம்.நதிகளை இணைப்பதற்கு ஒருகோடி ரூபாய் கொடுப்பதாக அறிவித்த ரஜினி தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும். 

தமிழகத்தில் மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களின் சமூக நல திட்டங்களால் எந்த வெற்றிடமும் இல்லை. காமாலை உள்ளவர்களுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தான் இருக்கும். குருமூர்த்தி உண்மையான ஆடிட்டராக இருந்தால் தமிழக அரசின் செயல்பாடுகள் புரியும். ஆனால், அவர் அரசியல்வாதியாக இருப்பதால் அரசின் செயல்பாடு புரியாது. ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் குருமூர்த்தியாகக் கூடாது.

ஜெயலலிதாவின் பல்வேறு திட்டங்களைத் தான் கர்நாடகாவில் அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்துள்ளன. குருமூர்த்தி தமிழக அரசின் பட்ஜெட்டை படித்துவிட்டு பேச வேண்டும். எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் பல்வேறு திட்டங்களில் தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தான் வெற்றிபெறும். காவிரி தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாக உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது

டிடிவி பற்றி தமிழக மக்களுக்கு தெரியும். அவர் தான் விலாங்கு மீன் போன்றவர். மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய நெத்திலி, வஞ்சிரம் போன்ற மீன்கள் தான் தமிழக அரசு.

குழந்தைக் கடத்தல், பாலியல் வன்கொடுமைகள் செய்யும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கான பல நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுக்கக்கூடாது. சட்டப்படி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

 

Related Posts