நாசகார நியூட்ரினோ திட்டத்தை எந்த வகையிலும் நிறைவேற்ற விடமாட்டேன்

நாசகார நியூட்ரினோ திட்டத்தை எந்த வகையிலும் நிறைவேற்ற விடமாட்டேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தேனி : ஏப்ரல்-05

தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ள நிலையில், இந்த திட்டத்தைரத்து செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 31ஆம் தேதி மதுரையில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,பொதுமக்களிடையே விழிப்புணர்வைஏற்படுத்தி ஆதரவு திரட்டவும் மதுரை-தேனி மாவட்டங்களில் 10 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.

தேனி மாவட்டத்தில், பழனிசெட்டிபட்டி, முத்துத்தேவன்பட்டி, போடேந்திரபுரம், சடையல்பட்டி விலக்கு, காமராஜபுரம், பத்ரகாளிபுரம், விசுவாசபுரம்,மீனாட்சிபுரம், மேலசொக்கநாதபுரம், திருமலாபுரம், பி.எச். ரோடு ஆகிய இடங்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்றார். அப்போது, பொதுமக்கள், விவசாயிகளை சந்தித்த வைகோ, நியூட்ரினோ திட்டத்தால், ஏற்படும் விளைவுகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.

இதையடுத்து, போடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாட்டின் நலனுக்காக நாசகார நியூட்ரினோ திட்டத்தை எந்த வகையிலும் நிறைவேற்ற விடமாட்டேன் என்று தெரிவித்தார். மேலும், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக போராட இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்தார்.

Related Posts