நாடு முழுவதும் நாளை 15 நிமிடம் படப்பிடிப்பு நிறுத்தம்; பத்மாவதிக்கு ஆதரவு

பத்மாவதி படத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் நாளை மாலை 15 நிமிடம் படப்பிடிப்புகளை நிறுத்த திரையுலகினர் தீர்மானித்துள்ளனர்.

சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி, இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த தீபிகா படுகோனே மற்றும் இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலைக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கொடும்பாவிகளை எரித்த ஒரு அமைப்பினர், தீபிகாவை உயிருடன் எரித்து கொல்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், பத்மாவதி படத்தை ஆதரிக்கும் வகையிலும், இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருபவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் நாடு முழுவதும் நாளை மாலை 4.15 மணியில் இருந்து 4.30 மணிவரை 15 நிமிடம் படப்பிடிப்புகளை நிறுத்திவைக்க இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த முடிவுக்கு திரையுலகை சேர்ந்த 19 துணை அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஒளிப்பதிவாளர்கள், எழுத்தாளர்கள், ஒப்பனை கலைஞர்கள். டப்பிங் கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், பாடகர்கள் சங்கம், சண்டைக் காட்சி இயக்குநர்கள் சங்கம் போன்ற துணை அமைப்பை சேர்ந்த சுமார் 700 பேர் இந்த 15 நிமிட வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளனர்.

Related Posts