நாட்டின் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு ராணுவம் பதிலடி

நாட்டின், அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு ராணுவம் பதிலடி கொடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வானொலியில், மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, சர்ஜிக்கல் தாக்குதல் நடந்து 2ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடக்கும், பராக்கிரம பார்வ் நிகழ்ச்சி பெரிய வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி, ராணுவத்தின் பெருமிதத்தை இளைஞர்கள், தெரிந்து கொள்ள உதவுவதுடன், அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளதாகவும், இது மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலை எண்ணி நாட்டு மக்கள் பெருமை கொள்கின்றனர் எனவும், பயங்கரவாதிகள், உதவியுடன் நடந்த நிழல் யுத்தத்திற்கு இந்திய வீரர்கள் அளித்த பதிலடியாக நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து பெருமிதம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.  நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சியை கெடுக்க நினைப்பவர்களுக்கு ராணுவ வீரர்கள், எப்போதும் உரிய பதிலடி கொடுப்பார்கள் என மோடி உறுதிபட தெரிவித்தார்.. பேரிடர் நேரங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் விமான படை வீரர்கள் முன்னால் நிற்கிறார்கள் என பெருமிதம் தெரிவித்த மோடி, படகுபோட்டியில் பங்கேற்று காயமடைந்த கடற்படை கமாண்டர் அபிலாஷ் டோமியுடன் தொலைபேசியில் பேசியதாகவும், நெருக்கடி நிலையில் இருந்து மீண்ட அவரின் உத்வேகம், இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் எனவும் கூறினார்.காந்தி ஜெயந்தி, இந்தியாவுக்கு முக்கியமான நாள் எனவும், மகாத்மாவின் கொள்கைகள் இந்தியா வளர உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்த காந்தி, தேசத்திற்கு ஆற்றிய பணியை மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள் எனவும், காந்தி அளித்த போதனைகள் இன்றைய காலகட்டத்திற்கும் ஏற்றதாக உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related Posts