நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்

இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்திய நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

இந்தி மொழி தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதற்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்றார். பல்வேறு மொழிகளை கொண்ட மக்கள், தங்கள் தாய் மொழியுடன் இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள அவர், இந்தி மொழியால் மட்டுமே நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க முடியும் என தெரிவித்துள்ளார். இந்தி மொழியை அடிக்கடி பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்ட அவர்,  ஒரே மொழி, ஒரே தேசம் என்ற மகாம்தா காந்தி, வல்லபாய் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, பிரதமர் மோடியின் பிறந்தநாள் 17 ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி இன்று முதல் பா.ஜ.கவினர் சேவை வாரம் கடைபிடிக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாக கூறினார்.

Related Posts