நாட்டின் தூய்மையான புண்ணிய தலம்மாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு விருது

நாட்டின் இரண்டாவது தூய்மையான, சுகாதாரமான, புண்ணிய தலம் என்ற விருதை மதுரை மீனாட்சியம்மன் கோவில் பெற்றுள்ளது.

மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு நாடு முழுவதுமிருந்து புனித தலங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் தூய்மை, சுகாதாரம் கண்காணிக்கப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிலும் சுமார் 25 நவீன மின்னணு கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் சுற்று பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆங்காங்கே இரட்டை குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் துப்புரவு பணிக்கு பணியாளர்கள் இருப்பதுடன், நவீன மண் கூட்டும் இயந்திரம், 63 காம்பேக்டர் பின்கள், 4 மினி காம்பேக்டர் லாரிகள், 15 சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திரங்கள் மற்றும் பக்தர்களை அழைத்துச் செல்வதற்கு வசதியாக 5 நவீன பேட்டரி வாகனங்கள் போன்ற வசதிகளும் உள்ளன. டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஸ்ரீகஜேந்திரசிங் ஷெகாவத், இணை அமைச்சர் ஸ்ரீரத்தன்லால் கட்டாரியா ஆகியோர் இரண்டாம் பரிசுக்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழை மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகனிடம் வழங்கினர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் முதல் தூய்மையான புனித தலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Related Posts