நாட்டில் மின்னணு வாகனங்கள் உற்பத்திக்கு அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும்

நாட்டில் மின்னணு வாகனங்கள் உற்பத்திக்கு அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

வாகன வசதிகள் குறித்த முதலாவது சர்வதேச மாநாடு, டெல்லியில் தொடங்கியது. நிதிஆயோக் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த 2 நாள் மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய பிரதமர், எளிதான வாழ்க்கைக்கும், இந்த பூமியை பாதுகாக்கவும் முக்கிய காரணியாக வாகன வசதிகள் இருப்பதாகத் தெரிவித்தார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில், போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது தற்போதைய அவசியத் தேவை என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள தொழிலதிபர்களும், உற்பத்தியாளர்களும், பேட்டரி தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட மோடி, மின்னணு வாகனங்கள் உற்பத்திக்கு அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தத் துறையில் அடுத்த தலைமுறையினருக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார். உலகமே பின்பற்றும் வகையிலான போக்குவரத்து புரட்சியை இந்தியா ஏற்படுத்த வேண்டும் என பிரதமர்  மோடி கேட்டுக் கொண்டார்.

பின்னர் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் கண்காட்சியைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். கண்காட்சியில் மின்சார கார்கள்,  சைக்கிள்கள் மற்றும் பேருந்துகள் இடம்பெற்றிருந்தன. மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று, சர்வதேச அளவில் போக்குவரத்து முறையில் பின்பற்றப்படும் வழிமுறைகள் குறித்தும், அதில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

Related Posts