நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்:  எடப்பாடி பழனிசாமி 

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது வாக்கை எடப்பாடியை அடுத்த தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் பதிவு செய்தார். இந்நிலையில் இன்று சென்னை புறப்பட்ட அவர், சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தார். நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்ற முதல்வர், வரும் தேர்தல்களிலும் இதே கூட்டணி தொடர முழு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். போதிய பேருந்துகள் இயக்கப் படவில்லை எனும் குற்றச்சாட்டு, சூறைக் காற்றால் பயிர்கள் சேதமடைந்துள்ளது ஆகியவை குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அமைச்சர்கள் செயல்பட முடியாது என்றும் அதிகாரிகளைக் கொண்டே செயல்பட முடியும் என்றும் தெரிவித்தார். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்துக்கு சென்று ஆய்வு செய்யப்படும் என்று முதல்வர் கூறினார்.

Related Posts