நான்கு லட்சம் விண்ணப்பங்கள் பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது: வைகோ

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி நான்கு லட்சம் விண்ணப்பங்கள் பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த அறிக்கை சமர்ப்பிக்க, மேகாலயா முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால், சுற்றுச்சூழல் விஞ்ஞானி சதீஷ், சி.கார்போட்டிக், மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரி வரலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்தக்குழு கடந்த 23ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மற்றும் ஆதரவு தெரிவித்தவர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டது. அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் 24ந் தேதி விசாரணை நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில்  வழக்கறிஞர் ராமன் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். எதிர்ப்பாளர்கள் தரப்பில் மதிமுக பொதச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் ஆஜராகினர். பின்னர் கருத்துக் கேட்பு அக்டோபர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நேரில் ஆஜராகி தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என்று நீதிபதி தெரிவித்தார். இதன்படி எதிர்பாளர்கள் கருத்து கேட்பு கூட்டம், சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆஜராகி தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழக மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 22 ஆண்டுகளாக போராடி வருவதாகவும், தூத்துக்குடியில் 13 பேர் கொல்லப்பட்ட பிறகே ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினார். இந்நிலையில் அமைக்கப்பட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவிடம் ஆலையை மீண்டும் திறக்க 45ஆயிரம் பேர்  கடந்த அமர்வில் விருப்பம் தெரிவித்தனர் எனவும், இந்தஅமர்வில்  நான்கு லட்சம் பேர் ஸ்டெர்லைட் க்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளதாகவும் வைகோ கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலை கோவா, குஜராத் மற்றும், மகாராஷ்டிராவில் விரட்டப்பட்டதாகவும்  தமிழகத்தில் ஜனநாயக அடிப்படையில் போரட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் பசுமை தீர்ப்பாய அமர்வில் கூறியதாக வைகோ தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலை மக்கள் நலனுக்கு எதிரானது எனவும், நிலம், நீர், காற்று ,மாசுபடுத்தும் இந்த ஆலையை திறக்க கூடாது என நீதிபதியிடம் தெரிவித்ததாக வைகோ குறிப்பிட்டார்.

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் கீதாஜீவன், தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் அர்ஜூனன், வணிகர் பேரவை தலைவர் வெள்ளையன், உள்ளிட்டோர் ஆஜராகி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்தனர். தீர்ப்பாயத்தின் முன்பு தூத்துக்குடி மக்கள் குவிந்திருந்தனர். பெண்கள் தங்களது நெத்தியில், ஸ்டெர்லைட் ஆலையை தடை செய் என்ற ஸ்டிக்கரை ஒட்டி இருந்தனர்.

Related Posts