நாளை கர்நாடக சட்டசபை தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

 

 

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கர்நாடக சட்டமன்றத்தின் 223 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் காலமானதையடுத்து அங்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் பல்வேறு தொகுதிகளில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, கர்நாடக பாஜக முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா, மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன்சிங், முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர். தொடர்ந்து பல வாரங்களாக பரபரப்பாக காணப்பட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதையடுத்து, வாக்குப்பதிவுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. நாளை காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக கர்நாடக காவல்துறையினருடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படையினர் 50 ஆயிரம் பேரும் கர்நாடகத்திற்கு வந்துள்ளனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் 15-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Related Posts