நிஜாமாபாத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு

நாட்டில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக தெலங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வாக்குப்பதிவை எதிர்நோக்கியுள்ள நிஜாமாபாத் தொகுதியில், அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா மற்றும் விவசாய சங்கத்தினர் உட்பட மொத்தம் 185 பேர் போட்டியிடுகின்றனர். எனினும் இத்தேர்தலில் வாக்குச்சீட்டுகளை பயன்படுத்துவதில்லை என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது.  ஒரு இயந்திரத்தில் 24 வேட்பாளர்கள் என ஒரே வரிசையில் 12 வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக நிஜாமாபாத் தொகுதிக்கு மட்டும் 26 ஆயிரத்து 820 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2ஆயிரத்து 600 விவிபேட் இயந்திரங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுதியில் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது உலக அளவில்  இதுவே முதல் முறையாகும். வாக்குப்பதிவின் போது மின்னணு இயந்திரங்களை எடுத்து வரவும், எடுத்துச் செல்லவும் அவசர உதவிக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிக ஊழியர்கள் தேவைப்படுவதால் அவர்களின் பயணம் மற்றும் அகவிலைப்படிக்கு பெரும் தொகை தேவைப்படுகிறது.  இது தவிர அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் அதிகளவில் தேவை என்பதால் நிஜாமாபாத் தொகுதியில் தேர்தல் நடத்த .35 கோடி ரூபாய் செலவாகும் என தேர்தல் ஆணையம் மதிப்பிட்டுள்ளது.  இந்த செலவு ஒவ்வொரு தொகுதிக்குமான சராசரி செலவை காட்டிலும் 15 கோடி ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts