நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளது – அமெரிக்கா

பாலஸ்தீனத்துக்கு  அளிக்கப்பட்டு வந்த  நிதியுதவி நிறுத்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இஸ்ரேல் தலைநகராக ஜெரூசலத்தை அமெரிக்கா அங்கீகரித்ததை தொடர்ந்து வெள்ளை மாளிகையுடனான உறவை பாலஸ்தீனம் முறித்துக்கொண்டது. இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங் மற்றும் காசா நகரங்களின் நிர்வாகம், சுகாதாரம், கல்வி போன்றவற்றை மேம்படுத்த 251மில்லியன் டாலர்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்து. ஆனால், அப்பகுதிகளில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் பாலஸ்தீனத்துக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஏற்கனவே மனித உரிமைகள் மற்றும் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியில், பொதுமக்களின் உயிருக்கு பயங்கரவாதிகள் ஆபத்தை விளைவித்து வருவதால் அங்கு மிகவும் மோசமான சூழல் நிலவிவருகிறது. இதனால், இப்பகுதியில் தேவையான உதவிகளை செய்வதில் சர்வதேச நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது என அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலஸ்தீனம் அமெரிக்காவின் இந்த முடிவு ‘அரசியல் ரீதியிலான மலிவான அச்சுறுத்தல்’ என குறிப்பிட்டுள்ளது.  இது போன்ற நடவடிக்கைகளால் பாலஸ்தீன மக்களையும், அரசையும் மிரட்டமுடியாது எனவும், பாலஸ்தீன மக்களின் உரிமை விற்பனைக்கானது அல்ல எனவும்தெரிவித்துள்ளது

Related Posts