நினைவு தினத்தையொட்டி, தந்தை படத்துக்கு வைகோ மரியாதை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது தந்தை வையாபுரியின் 45-வது நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  

திருநெல்வேலி : ஏப்ரல்-05

திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் வசித்து வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தந்தையார் வையாபுரி, 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி காலமானார். அவரது நினைவு தினத்தன்று ஆண்டு தோறும் வைகோ மவுன விரதத்தை கடைபிடித்து வருகிறார். அதன்படி, கலிங்கப்பட்டியில் உள்ள வீட்டில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமது தந்தையார் வையாபுரியின் 45-வது நினைவு தினத்தை கடைபிடித்தார். இதையொட்டி, அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வைகோ மரியாதை செலுத்தினார். இதேபோல், வைகோவின் சகோதரர் ரவிச்சந்திரனும், தமது தந்தையார் வையாபுரியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, நாள் முழுவதும் வைகோ மவுன விரதம் மேற்கொண்டு வருகிறார். நாளை போடியிலிருந்து நியூட்ரினோ எதிர்ப்பு பயணத்தை வைகோ மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திருவேங்கடத்தை அடுத்த பிள்ளையார் கோவில் கிராமத்தில் உள்ள வடபத்திரகாளியம்மன் மற்றும் கல்யாண வீரபத்திரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பட்டு வேட்டி, சட்டையுடன் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கோவில் நிர்வாக குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கிராம மக்கள் அனைவரும் அனைத்து வளங்களும், நலமும் பெற்று வாழ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Related Posts