நிபா வைரஸ் காய்ச்சலால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை செயலாளர்

 

 

கேரளாவில் பீதியை ஏற்படுத்தியுள்ள  நிபா வைரஸ் காய்ச்சலால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் மிகவும் அரிதான மரணத்தை ஏற்படுத்தும் நிபா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 15  பேர் உயிரிழந்துவிட்டனர். வைரஸின் தன்மையை கண்டறிவதற்காக உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரிகள், புனே தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து உடனடியாக கோழிக்கோடு மாவட்டத்திற்கு சென்று நிபா வைரஸ் தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய நோய் தடுப்பு மைய இயக்குநருக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

 தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று இல்லை என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று ஏற்படாதவாறு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களை கண்காணிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழம் தின்னும் வவ்வால் மற்றும் பன்றிகள் மூலம் நிபா வைரஸ் பரவுகிறது. காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் செய்வதை தவிர்த்து, மருத்துவமனையை அணுகவும். 
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் காய்ச்சல் குறித்து கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது குறித்து தமிழக மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கூறினார். நீலகிரி, கோவை உள்ளிட்ட கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் கூடுதல் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், ஆய்வு மையம் அமைத்து தொடர்ந்து கண்காணிக்கும் படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Related Posts