நியூட்ரினோ திட்டத்தின் மூலம் அணுக்கழிவுகளை கொட்ட சதி: வைகோ குற்றச்சாட்டு

 

 

நியூட்ரினோ திட்டத்தை கொண்டுவந்து அணுக்கழிவுகளை கொட்ட திட்டமிட்டுள்ளார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ள நிலையில், இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 31ஆம் தேதி மதுரையில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். 10-ஆம் நாள் நடைபயணத்தை கூடலூரில் இருந்து தொடங்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கம்பம் பகுதிகளில் உள்ள கிராம மக்களிடம், நியூட்ரினோ திட்டம் குறித்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டார். தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்ட  மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு பொதுமக்கள், விவசாயிகள் அணிதிரண்டு வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக கம்பத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு துடிப்பதாகவும், அதனை ஆரம்பம் முதலே எதிர்த்து வருவதாகவும் விளக்கினார்.

நியூட்ரினோ ஆய்வகத்தை கொண்டுவந்து அணுக்கழிவுகளை கொட்ட திட்டமிட்டிருக்கிறார்கள் என்றும் வைகோ குற்றஞ்சாட்டினார்.

 

Related Posts