நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த மதிமுக நிர்வாகி ரவி மரணம்

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் தீக்குளித்த மதிமுக நிர்வாகி ரவி, சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். அவரது உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

மதுரை : ஏப்ரல்-02

மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் கடந்த 31ஆம் தேதி நடைபயணம் தொடங்கினார். அவரது பயணத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, மேடையின் அருகே விருதுநகர் மாவட்ட மதிமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி திடீரென தீக்குளித்தார். இதில், படுகாயம் அடைந்த அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரவியை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து, மருத்துவர்களிடம் ரவியின் சிகிச்சை விவரங்களை அறிந்ததுடன், உயர்ந்த சிகிச்சை அளிக்கும்படி, கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விருதுநகர் மாவட்ட மதிமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று காலை உயிரிழந்தார். மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ரவியின் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, ரவியின் உடல், அவரது சொந்த ஊரான சிவகாசிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Related Posts