நிர்மலாதேவி விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய சந்தானம் குழுவுக்கு தடை

 

 

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரணை நடத்திய சந்தானம் குழுவின் அறிக்கையை வெளியிட  சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரிக்க, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். சம்பந்தப்பட்டவர்களிடம் முழுமையான விசாரணை நடத்திய சந்தானம் தனது அறிக்கையினை தயாரித்து வருகிறார். வரும் 15-ஆம் தேதியன்று அவர் தனது அறிக்கையை ஆளுநரிடம் ஒப்படைப்பார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள சந்தானத்தின் விசாரணை அறிக்கையை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகிய இருவருக்கும்  உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில்,சந்தானத்தின் விசாரணை அறிக்கை ஆளுநரிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையானது சீலிடப்பட்ட கவர் ஒன்றில் வைக்கப்பட வேண்டும் என்றும் இது ஊடகங்கள் உள்ளிட்ட யாருக்குமே அளிக்கப்படக் கூடாது என்றும் அந்த உத்தரவில் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Related Posts