நிர்மலாதேவி விவகாரம் – விசாரணை அறிக்கை வரும் 15 ஆம் தேதி தாக்கல்

நிர்மலாதேவி விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை ஆளுநரிடம் வரும் 15 ஆம் தேதிக்குள் கொடுக்கப்படும் என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.

மதுரை : மே-05

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. அதேசமயம், இதன் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிய ஆளுநரால் நியமிக்கப்பட்ட அதிகாரியான சந்தானத்தின் விசாரணையும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், மூன்றாம் கட்ட விசாரணை முடிந்து விட்ட நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சந்தானம், பேராசிரியை நிர்மலா தேவியுடனான விசாரணை நிறைவடைந்து விட்டதாக குறிப்பிட்டார். மேலும் இந்த வழக்கில் 50க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதன் அறிக்கையை வரும் 15ம் தேதிக்குள் ஆளுநரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் சந்தானம் தெரிவித்தார். விசாரணை அறிக்கையைக் குறித்து விசாரணை அதிகாரி சந்தானம்  வெளிப்படையாக எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டார். தமிழில் உள்ள விசாரணை விவரங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வழங்கப்படும் என்றும், அதனை வெளியிடுவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts