நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் :ராகுல் காந்தி வலியுறுத்தல்

ரபேல் விவகாரத்தில் பொய் பேசும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரபேல் ஊழலை நியாயப்படுத்தி பேசுமாறு பணிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தான் பேசி வருவது பொய் என்பதை அவரே தொடர்ந்து நிரூபித்து வருவதாக கூறியுள்ளார். முன்னாள் எச்ஏஎல் நிறுவன தலைவர் டி.எஸ். ராஜு அளித்துள்ள ஒரு பேட்டியின் மூலம் நிர்மலா சீதாராமன் பேசுவது பொய் என்பது அம்பலமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரபேல் விமானத்தை கட்டமைக்கும் தகுதி எச்ஏஎல் நிறுவனத்திற்கு உள்ளது என்று ராஜு கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி, இதற்கு மேலும் நிர்மலா சீதாராமன் சொல்லும் பொய்களை நம்ப முடியாது என்று தெரிவித்துள்ளார். அவர் தனது பதவியில் நீடிக்கும் தகுதியையும் இழந்து விட்டார் எனவும், அவர் கண்டிப்பாக பதவி விலக வேண்டும் எனவும், ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக டி.எஸ். ராஜு அளித்த ஒரு பேட்டியில், இந்தியாவிலேயே ரபேல் விமானங்களை கட்டமைக்க முடியும் எனவும், அதற்கான தகுதியும், திறமையும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு உண்டு எனவும் கூறியுள்ளார். இந்திய பொறியாளர்கள் திறமையானவர்கள் எனவும், இதுதொடர்பான கோப்புகளை மத்திய அரசு ஏன் பகிரங்கப்படுத்தவில்லை என்பது தெரியவில்லை எனவும் தெரிவித்து இருந்தார். ஒரு வேளை குறிப்பிட்ட விலைக்குள் கட்டமைக்க முடியாத நிலை இருக்கலாம் எனவும், ஆனால் இத்தகைய விமானங்களை கட்டமைக்கும் திறமை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு உண்டு என்பதை மறுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். டி.எஸ். ராஜு. 3 வாரங்களுக்கு முன்புதான் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts