நிர்மலா தேவி வழக்கில் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் கைது

பேராசிரியை நிர்மலா தேவி மீதான புகார் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் முருகனை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை : ஏப்ரல்-23

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி 5 நாள் சிபிசிஐடி காவலில் எடுக்கப்பட்டார். நாளையுடன் காவல் முடிவடைய உள்ள நிலையில், விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அவரிடம் இன்று நான்காவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. நிர்மலா தேவியுடன் அதிகமாக செல்போனில் பேசிய சிலரை சிபிசிஐடி அதிகாரிகள் இன்று விசாரணைக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பேராசிரியை நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் அடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் இருவரை சிபிசிஐடி  காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் முருகனை காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை முறைப்படி நடத்தவும், தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காமராஜர் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Posts