நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதல்: 384 பேர் உயிரிழப்பு

    இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 384ஆக உயர்ந்துள்ளது.

      இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6புள்ளி1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில்7புள்ளி5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு எழுந்த அலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. பல்வேறு கிராமங்களில் வீடுகள் சுனாமியில் சிக்கி இடிந்து விழுந்தன. சுனாமியில் ஏராளமானோர் அடித்துச் செல்லப்பட்டனர். இந் நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts