நிவாரணத் தொகையை 5,000 லிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தவேண்டும்: மீனவர் சங்கங்கள் கோரிக்கை 

கிழக்கு கடலோரப் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கக் காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரையிலான 60 நாட்கள் விசைப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை  நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததால் சென்னை நீலாங்கரை முதல் குமரி மாவட்டம் குளச்சல் வரையிலான கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் உள்ள 13 மீன்பிடி மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் தங்களின் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த காலகட்டத்தில் மீனவர்கள் படகுகள், வலைகள் மற்றும், மீன்பிடி உபகரணங்களை பழுது பார்க்கும்பணியில் ஈடுபடுவார்கள்.  மீன்பிடி தடைகாலங்களில் மீனவ குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக அரசு உயர்த்தி வழங்கவேண்டும் என நாகை மாவட்ட மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் 5 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையிலும், விசைப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. 300 க்கும் மேற்பட்ட படகுகள் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் மற்றும் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களும், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.

Related Posts