நீட் தேர்வில் குளறுபடிகளை  மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் திட்டமிட்டு செய்து வருவது கடும் கண்டனத்துக்கு உரியது:  வைகோ 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் எனப்படும்  தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு திணிக்கப்பட்டு, தமிழக மாணவர்களின் கல்வி உரிமையைத் தட்டிப்பறித்த மத்திய பாஜக அரசு, தொடர்ந்து தமிழக மாணவர்களை வஞ்சித்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வை நடத்தும்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தமிழக மாணவர்களுக்கு ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்து அலைக்கழித்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம், பெரும்பான்மையான மாணவர்கள் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத மனதளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும்,  இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு மையங்களை வெளிமாநிலங்களில் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் தமிழ்நாட்டில் 14 நகரங்களில் தேர்வு மையங்களை இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது எனவும், தேர்வுக்கான நுழைவுச் சீட்டு கடந்த மாதம் பதினைந்தாம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் தங்களுடைய விவரங்களைப் பதிவேற்றி தேர்வு எழுதுவதற்கான நுழைவுச் சீட்டை பதிவு இறக்கம் செய்தபோது  பெரும்பாலான நுழைவு சீட்டுகளில் தேர்வு தேதி மாறியும், தேர்வு மையங்கள் தவறாகவும் குறிப்பிடப்பட்டு இருந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது பற்றிய புகார்கள் வந்ததும் தேர்வு நடத்தும் முகமை தவறுகளை சரி செய்ததாகக் கூறியதை அடுத்து  மீண்டும் நுழைவுச்சீட்டுக்களை மாணவர்கள் பதிவு இறக்கம் செய்து. நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் மதுரையில் உள்ள 6 தேர்வு மையங்கள் உட்பட, நாடு முழுவதும் 80க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் திடீரென்று முன்னறிவிப்பு இல்லாமல் மாற்றப்பட்டுள்ளதாகவும்,  நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்வு மையங்களை திடீரென்று மாற்றி உள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்திருப்பதுடன், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்புகளில் தமிழக மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் வெளியேற்றுவதற்கான சதியோ என்ற ஐயப்பாடு எழுவதாகவும்,  ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் இதுபோன்ற குளறுபடிகளை தேர்வை நடத்தும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் திட்டமிட்டு செய்து வருவது கடும் கண்டனத்துக்கு உரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். .நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்,  எடப்பாடி பழனிசாமி அரசு இது பற்றி எல்லாம் கவலைப்படாமல் மோடி அரசுக்கு கைகட்டி சேவகம் செய்து வருவதோடு பதவி, ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதை தமிழக மக்கள் உணர்ந்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.  மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப்போக்குக்கு எதிராக தமிழ்நாட்டு இளைஞர்கள் கொந்தளித்துப் போய் உள்ளனர் என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகளும், சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகளும் நிச்சயமாக பறைசாற்றும் என்று அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

Related Posts