நீட் தேர்வுக்கு விலக்கு விவகாரத்தில் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : மு.க.ஸ்டாலின் கோரிக்கை

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும், இரு மசோதாக்களையும் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி, மீண்டும் நிறைவேற்றிட வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் மசோதாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, திரும்பி வந்த மசோதாக்களை திரும்ப பெற்றுக்கொண்டு, மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒப்புதல் கடிதம் அனுப்பி வைத்ததுள்ளதாகவும், இது, மறுக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டதாக பொருள் என்றும், கூறினார்.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் தொடர்பான அரசியல் சட்டப்பிரிவுகளை படித்து பார்த்தால், அதில், மீண்டும் சட்டமன்றத்தில் நீட் மசோதாவை நிறைவேற்றி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் அதிகாரம் இருக்கிறது என்பது தெளிவாக தெரியவரும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நீட் மசோதாக்கள் குறித்து கடந்தாண்டு ஜூன் மாதம் சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைபெற்ற வாதங்களை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சமர்பித்துள்ளதாக கூறியிருக்கும் மு.க.ஸ்டாலின், அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைபெற்ற விவாதங்களின் நடவடிக்கை குறிப்புகளை ஏன் தாக்கல் செய்யவில்லை என வினவினார்.

ஏற்கனவே வாக்குறுதியளித்தபடி சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் இரு மசோதாக்களையும் மீண்டும் அவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பி வைக்க வேண்டும் என்றும், மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts