நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரம் : தந்தைக்கும் தொடர்பு உள்ளதா?

நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் பிடிபட்ட மாணவனின் தந்தைக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்ட பிறகு மாணவர்கள் பல நெருக்கடிகளுக்கு ஆளாகினர். நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களின் முழுக்கை சட்டை வெட்டப்பட்டு அவர்கள் எந்த ஒரு உபகரணங்களும் எடுத்து செல்லக்கூடாது என கடுமையான சோதனை நடத்தப்பட்டது. மாணவிகளின் தலைமுடியை கூட அவிழ்த்து சோதனை நடத்தப்பட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சலுடன் மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எதிர்கொண்டனர். தேர்வு எழுதும் அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மாணவர்கள் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடாமல் இருக்க கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இவ்வளவு கெடுபிடிகளுக்கு மத்தியில் ஆள் மாறாட்டம் எப்படி நடந்தது? என அனைவருக்கும் வியப்பாக உள்ளது. உயர்மட்ட ஒத்துழைப்பு இல்லாமல் ஆள்மாறாட்டம் நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை என்று பலரும் குற்றம்சாட்டியுள்ளனர். ஆள் மாறாட்ட விவகாரத்தில் மாணவனின் தந்தைக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் அவர் டாக்டராக இருப்பதால், தனது மகனையும் டாக்டராக்க நினைத்து, தவறான வழிமுறைகளை தேர்ந்தெடுத்தாரா? என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் மாணவரின் புகைப்படத்தோடு கைவிரல் ரேகையையும் பதித்து சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Posts