நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் பேருந்துகளில் அனுப்பிவைப்பு

நீட் தேர்வு எழுதுவதற்காக  கேரளாவுக்கு நெல்லையில் இருந்து   அரசு பேருந்தில் கட்டணமில்லாமல் மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

நெல்லை : மே-05

நாடுமுழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ஈரோட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டபோதும் தேர்வு மையங்களை மாற்ற சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்து விட்டது. இதனையடுத்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் தமிழக மாணவர்களுக்கு 2 ம் வகுப்பு ரயில் கட்டணம் மற்றும் 1000 ரூபாய் பயணப்படி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. நீட் தேர்வுக்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்கள் புறப்பட்டு செல்கின்றனர்.

நெல்லை மண்டலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 300 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். இவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்வதற்காக நெல்லையில் இருந்து இன்று காலை 7.30 மணி முதல் இரவு வரை 8 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள் நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களை இலவசமாக அழைத்து செல்ல உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ராதாபுரம் அதிமுக எம்.எல்.ஏ., இன்பத்துரை ஆகியோர், மாணவர்களுக்கு குடிநீர் பாட்டில், சிற்றுண்டி வழங்கி தொடங்கி வைத்தனர்.

இதேபோல் மேலும் பல இடங்களிலிருந்து நீட் தேர்வெழுதுவதற்காக மாணவ,மாணவிகள் புறப்பட்டுச் செல்கின்றனர். அவர்களுக்கு அரசு சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் உதவிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.

Related Posts