நீட் தேர்வு எழுத கேரளாவிற்கு வரும் தமிழக மாணவர்களுக்கு உதவி: பினராயி விஜயன் அறிவிப்பு

 

 

நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விண்ணப்பித்த தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தமிழக மாணவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணத்துடன் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீட் தேர்வு எழுத கேரளா வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் உதவி மையங்களை அமைக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Posts