நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு பயண செலவுடன் தலா ரூ.1000 நிதியுதவி

 

 

நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணத்துடன் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நீட் என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நாளை  மறுநாள்  நடத்த  உள்ளது.   இதில் பங்கேற்க விண்ணப்பித்த தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தமிழக மாணவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்த போதிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால், வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசையும், அதைத் தடுக்க முடியாத தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டன. இதையடுத்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். 

இதுதொடர்பாக  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணத்துடன் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். நீட் போட்டி நுழைவு தேர்வின் நுழைவு சீட்டின் நகல், படிக்கும் பள்ளியின் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு இந்த தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதில் சிரமம் ஏற்பட்டால் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லா தகவல்  ஆலோசனை மையத்தின் தொலைபேசி எண் 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெறலாம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான உதவைகளை அரசு செய்யும் என்றார்.

Related Posts